Thought for the day


வியாழன், 12 ஏப்ரல், 2012

ஆட்டோமேடிக் மொபைல் ஸ்டார்ட்டர்



பேசுவதற்கு, பாட்டு கேட்பதற்கு, குறுந்தகவல்கள் அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட மொபைல் போன், தற்போது, வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சவும் உதவுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, ரமேஷ் பாபு. வயது 51. பி.காம்., படித்து, தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
விவசாய நிலத்திற்கும், இவரது வீட்டிற்கும், இரண்டு கி.மீ., தூரம் உள்ளது. கரும்பு, நெல் போன்றவற்றை பயிரிட்டுள்ளார். தினசரி, தண்ணீர் பாய்ச்ச நடந்தே சென்று வருகிறார். கடந்த, மூன்றாண்டுகளாக தொடரும் மின்வெட்டால், எப்போது மின்சாரம் வருகிறது, எப்போது போகிறது என்பது தெரியாமல், வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டார்.
இரவு நேரத்தில், மும்முனை மின்சாரம் கிடைப்பதால், அந்த சமயத்தில் வயலுக்கு சென்று மோட்டாரை இயக்க வேண்டியிருந்தது. அப்போது வழியில் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் குறுக்கீடு இருப்பதால், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை.
இந்நிலையில், கடந்தாண்டு, சென்னை வர்த்தக மையத்தில் நடந்த கண்காட்சிக்குச் சென்றபோது, மொபைல் போன் மூலம், வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களை இயக்குவது குறித்து தனியார் கம்பெனி ஒன்றின், "ஆட்டோமேடிக் மொபைல் ஸ்டார்ட்டர்' கருவியைப் பார்த்தார்.

Nandri thinamalar
இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஏன், தன் வயலுக்கு மோட்டாரை இயக்கி தண்ணீர் பாய்ச்ச உபயோகப்படுத்தக் கூடாது என சிந்தித்தார். சிந்தனையை தன் மகன் சதீஷிடம் பகிர்ந்து கொண்டார். அவரது துணையுடன், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அதை பற்றி அவரே கூறுகிறார்:
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்திற்குச் சென்று, மொபைல் போன் மூலம் மோட்டார் இயக்கும், "ஆட்டோமேடிக் மொபைல் ஸ்டார்ட்டர்' குறித்து கேட்டோம். அவர்கள், மோட்டாரை இயக்குவதற்காக, ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு கருவியை தயாரித்து கொடுத்தனர். இதற்கு, 4,000 ரூபாய் செலவானது. அந்த கருவியை, எங்கள் வயலில் உள்ள மோட்டாரின் சுவிட்ச் போர்டுடன் பொருத்தினோம்.
அந்த கருவியில், மொபைல் போனிற்கு பயன்படுத்தும் சிம் கார்டு பொருத்தப்பட்டிருக்கும். அதனுடன், மோட்டார் உரிமையாளரின் மொபைல் எண்ணுடன் இணைப்பு கொடுக்கப்படும். மோட்டாரை இயக்க வேண்டுமென்றால், உரிமையாளரின் மொபைல் போனில் இருந்து, மோட்டார் அறையில் பொருத்தப் பட்டிருக்கும் ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்துடன் கூடிய கருவியில் இருக்கும் சிம் கார்டு நம்பருக்கு டயல் செய்ய வேண்டும். இணைப்பு வந்ததும், 1 என்ற எண்ணை அழுத்தினால், மோட்டார் இயங்கும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி முடிந்ததும், மீண்டும் அந்த எண்ணுக்கு டயல் செய்து, 0 என்ற எண்ணை அழுத்தினால், மோட்டார் நின்று விடும், என்றார் ரமேஷ் பாபு.
"கடந்த, ஆறு மாதமாக இந்த புதிய கருவியின் துணையுடன் மோட்டாரை இயக்கி, என் 14 ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். திடீரென வெளியூருக்குச் செல்ல நேர்ந்தால், வயல்வெளியில் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டுமே என்ற கவலை இல்லை. மொபைல் போனை எடுத்து இயக்கினாலே போதும், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி விடலாம்...' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் இந்த விவசாயி.
இதையறிந்த இவரது நண்பர்கள் சிலர், இந்த ஆட்டோமேடிக் மொபைல் ஸ்டார்ட்டரை பார்த்துச் சென்று, தங்களது நிலத்திற்கும் பொருத்த தயாராகி வருகின்றனர். மின்வெட்டு, இரவில் பாம்பு பயம் போன்றவற்றால், தண்ணீர் பாய்ச்ச சிரமப்படும் விவசாயிகள், தங்களது நிலத்திலும் இந்த கருவியை பொருத்த தகவல் பெற வேண்டுமென்றால், இவரது, 93813 38238 என்ற மொபைல் போனில் கேட்டு, விவரம் அறிந்து கொள்ளலாம். 
***
நன்றி தினமலர்

*முழுக்க முழுக்க, ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. எந்த மொபைல் நிறுவனத்தின் சிம் கார்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
*மின்வெட்டு இருக்கும் போது, மொபைலில் தொடர்பு கொண்டால், எந்தவித தொடர்பும் கிடைக்காது.
*ஆட்டோமேடிக் மொபைல் ஸ்டார்ட்டரை, நாம் மொபைலில் தொடர்பு கொண்டு இயக்கியதும், ஒரு நிமிடம் கழித்து, நம் மொபைல் போனிற்கு, "மோட்டார் ஆன்' என்ற குறுந்தகவல் வரும். மோட்டார் நின்றதும், "மோட்டார் ஆப்' என்ற குறுந்தகவல் வரும்.
* மோட்டார் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்பதை அறிய, ஆட்டோமெடிக் மொபைல் ஸ்டார்ட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் சிம் கார்டு எண்ணிற்கு தொடர்பு கொண்டால், "பீப் பீப்' என விட்டு, விட்டு சத்தம் வரும். அதுவே பீப்... என நீண்ட சத்தம் வந்தால், மோட்டார் ஆப் ஆகி விட்டது என தெரிந்து கொள்ளலாம்.
*மொபைல் போன் பில் அதிகம் ஆகும் என கவலைப்பட வேண்டியதில்லை. சாதாரணமாக வருடத்திற்கு, 100 ரூபாய் ரீசார்ஜ் செய்தாலே போதும். இலவச எஸ்.எம்.எஸ்., திட்டம் உள்ள மொபைல் நிறுவனத்தின் சிம் கார்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம்!

0 comments:

கருத்துரையிடுக